சட்டமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஐவர் குழு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ள தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.. இந்த ஐவர் குழு இன்று (டிசம்பர் 3) காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது.
இதன் பிறகு சென்னை அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் சந்தித்து பேசினர். காங்கிரஸ் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
இன்றைய சந்திப்பின் போது கூட்டணி கட்சிகள் இணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் பேசுவதற்கு திமுக நேரம் ஒதுக்க உள்ளது.


