திருப்பரங்குன்றத்தில் பக்தகோடிகள் மீது தாக்குதல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இந்து விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் தீயசக்தி திமுக விரைவில் முருகப்பெருமானின் ஆசியோடு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். ஆனால் உத்தரவுப்படி தர்ஹா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்ஹாவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர். இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலையேற முயற்சித்து போலீஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீஸார் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” இந்துக்களின் பண்பாட்டு உரிமையை முடக்கப்பார்க்கும் திமுக அரசு வீழ்த்தப்படும். திருப்பரங்குன்றத் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றமே உத்தரவிட்டுவிட்டப் பிறகும், அதனை மீறி தீபம் ஏற்றவிடாமல் தடுத்ததோடு, திரண்டிருந்த முருக பக்தர்கள் மீதும் வெறித்தனமாக திமுக அரசு தாக்கியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்துக்களின் மதநம்பிக்கைகளைப் புண்படுத்தி, பண்பாட்டு உரிமையைப் பறிக்கும் கொடூர ஆசையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவையே அவமதித்துத் திமுக அரசு செயல்பட்டுள்ளது, இந்து மதத்தின் மீதான அதன் ஆழ்ந்த வெறுப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.திருப்பரங்குன்றத்தைத் தாரை வார்க்க முயற்சித்ததிலிருந்து, பக்தகோடிகளைக் கொடூரமாகத் தாக்குவது வரை தொடர்ந்து இந்து விரோதப் போக்கைக் கடைபிடித்து வரும் தீயசக்தி திமுக விரைவில் முருகப்பெருமானின் ஆசியோடு தமிழக மக்களால் துரத்தியடிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

 

Related Posts

இறந்தவர்களின் பெயர்கள் இணையதளங்களில் வெளியீடு:தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின், இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு…

பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் மீது போலீஸில் புகார்: சூடுபிடிக்கும் ஹிஜாப் விவகாரம்

பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கியதாக பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மீது சமாஜ்வாதி கட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநில தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் பணி நியமன ஆணை வழங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *