September 10, 2026

சிங்கப்பெண் எஸ்.ஐ-யிடம் விசிலடித்து வாலிபர் சேட்டை: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: பெண்களின் பாதுகாப்பிற்காகச் செயல்படும் ‘சிங்கப்பெண்’ போலீஸ் படையைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரிடமே, வாலிபர் ஒருவர் போதை போதையில் விசிலடித்து வம்பு செய்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு, ‘சிங்கப்பெண்’ போலீஸ் படை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் பெண் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சாலையோரமாக நின்றுகொண்டிருந்த எஸ்.ஐ பிரபாவதியைக் கண்ட வாலிபர் ஒருவர், குடிபோதையில் விசிலடித்து, கேலிச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிங்கப்பெண் படையினர், உடனடியாக அருகில் இருந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த திலீப்குமார் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட சிங்கப்பெண் படை பெண் அதிகாரியிடமே, போதை ஆசாமி ஒருவர் பொது இடத்தில் விசிலடித்துச் சேட்டை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed