அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு மற்றும் லஞ்சம் நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரி, தவெக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அரசு வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியான மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஞானசவுந்தரி, தமிழக அரசு கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்ட அரசு வழக்கறிஞர் நியமன அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பித்திருந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரும், தவெக உறுப்பினருமான தாம் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பித்ததாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கான பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியானபோது அதில் தனது பெயர் இடம்பெறாததைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டதாகவும், அப்போது அரசு வழக்கறிஞர் நியமனங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், தகுதியானவர்களை மட்டுமே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், விழுப்புரம் மாவட்ட அரசு வழக்கறிஞராக தன்னை நியமிக்கவும், அதுவரை அரசு வழக்கறிஞர்கள் நியமன நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், விழுப்புரம், வானூர், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கான 20 அரசு வழக்கறிஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலிலும் ஞானசவுந்தரியின் பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து, தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், இணையவழி மூலம் கட்சியில் உறுப்பினராக இணைந்திருந்த ஞானசவுந்தரி, கட்சியின் ஒழுக்கம், கொள்கை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதுடன், எதிரிகளுடன் இணைந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகக் கூறி, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் கடந்தும் கட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அரசு வழக்கறிஞர்கள் நியமனப் பட்டியல் வெளியான மறுநாளே ஞானசவுந்தரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் சட்ட மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உயர்நீதிமன்ற விசாரணையின் முடிவு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

More Stories
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டி ரூ.4.5 லட்சம் பறிப்பு – தம்பதி கைது
நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!
மதுரை அருகே பரபரப்பு: உளவுத்துறை காவலர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் – போலீஸ் தீவிர விசாரணை!