நாகர்கோவில் சிறையில் கைதி அடித்துக் கொலை: சிறை வார்டர்கள் சஸ்பெண்ட்; 8 பேர் அதிரடி கைது!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை வியாபாரி சபரிவர்மன் (33) அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 3 சிறை வார்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், சக கைதிகள் 8 பேர் கொலை வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் பின்னணி: கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 9-ஆம் தேதி அவரது கடையில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, தென்தாமரைகுளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்குள் நடந்த கொடூரம்: கடந்த 12-ஆம் தேதி இரவு சிறை வளாகத்திற்குள் சபரிவர்மனுக்கும் சக கைதிகள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கைதிகள் மற்றும் சிறை வார்டர்கள் இணைந்து சபரிவர்மனின் கை, கால்களைக் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை, சிறைக் காவலர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்: கடந்த 13-ஆம் தேதி காலை சபரிவர்மன் உயிரிழந்ததாக உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட்டு சத்தியமூர்த்தி மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் சிறையில் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் சிறைக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகள் கைது: இக்கொலைச் சம்பவம் தொடர்பாக முதற்கட்டமாக நாகர்கோவில் சிறையின் முதன்மை வார்டர் திருமலைநம்பி, வார்டர்கள் ஜெகன் மற்றும் சிவகுமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்கள் மூவரையும் சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வார்டர்களுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்ட சக கைதிகளான விஷ்ணு (21), சாரதி (19), ஜெகன் (40), சரத் (20), வெரியபெருமாள் (36), சேதுராம் (30), அஜித் (29) மற்றும் அரவிந்த் (27) ஆகிய 8 பேரையும் போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் பதற்றம்: கடந்த 1996-ஆம் ஆண்டு நாகர்கோவில் சிறைக்குள் புகுந்து கபடி வீரர் லிங்கம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, சுமார் 30 ஆண்டுகள் கழித்து தற்போது சிற வளாகத்திற்குள்ளேயே விசாரணை கைதி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்கக் கோரி உறவினர்கள் 3-வது நாளாக உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.