கோவை ஈஷா யோக மையத்தில் நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவின் திருமணம் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சமந்தா, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் 2021-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் ஓராண்டில் நடிகை சோபிதா துலிபாலா என்பவரை நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டார்.
இந்த சூழலில் நடிகை சமந்தா, பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கு நடிகை சமந்தாவின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரபல பாலிவுட் பத்திரிகையிலும் சமந்தா மற்றும் ராஜ் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள லிங்க பைரவ கோயிலில் நடிகை சமந்தாவை ராஜ் நிடிமோரு இன்று (டிச.1) ரகசிய திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் இன்று அதிகாலை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நடிகை சமந்தா திருமணம் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


