அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 8 யானைகள் உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டி யானை படுகாயமடைந்தது.
அசாம் மாநிலம், ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை சாய்ராங்-புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், சாங்ஜுராய் கிராமத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது யானைக்கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளது. இதனால் ரயில் பைலட் ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், யானைகள் மீது ரயில் மோதி 5 பெட்டிகளும், எஞ்சினும் தடம் புரண்டன. வேகமாக வந்த ரயில் மோதியதில் 8 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் ஒரு குட்டியானை படுகாயமடைந்தது. இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.
இது தொடர்பாக நாகோன் பிரதேச வன அதிகாரி சுஹாஷ் கடம் கூறுகையில், ” இன்று அதிகாலை 2.17 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. அப்பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த இந்தப் பகுதி குவஹாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ தொலைவில் உள்ளது. யானை வழித்தடம் அல்லாத ஒரு இடத்தில் தான் விபத்து நடந்துள்ளது” என்றார். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள், காலியாக இருந்த மற்ற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அகற்றப்பட்ட பின், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது.


