செவிலியர்கள் பிரச்னைக்கு அதிமுக ஆட்சிதான் காரணம் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும், அரசு ஊழியர்களுக்கு இணையாகச் சலுகைகள் வழங்கக் கோரியும் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதனைக் கண்டித்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர்,, “ காலிப்பணியிடங்கள் உருவாவதற்கு ஏற்ப சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3,783 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 169 காலிப்பணியிடங்கள் உள்ளன, அவை உடனடியாக நிரப்பப்படும். மருத்துவ சேவை என்பது மிகவும் அவசியமானது என்பதால், போராட்டங்களின் போது பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான் இந்த ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் நியமன முறை கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் நிரந்தரமாகத்தான் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் பிரச்னை உருவாகக் காரணமே முந்தைய அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறைதான் ” என்றார்.


