தமிழில் ‘லேசா லேசா’, ‘புள்ளக்குட்டிக்காரன்’ படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீனிவாசன். மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 225 படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘லேசா லேசா’, ‘புள்ளக்குட்டிக்காரன்’ படத்தில் அவர் நடித்திருந்தார். நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல்வேறு திறமைகளைக் கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(டிசம்பர் 20) காலமானார். அவருக்கு வயது 69.
இவருக்கு விமலா என்ற மனைவியும், பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான வினித் ஸ்ரீனிவாசன், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தியான் ஸ்ரீனிவாசன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.சுமார் 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்த ஸ்ரீனிவாசன், 6 முறை கேரள மாநில விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் கூறுகையில்,”என் அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. திரைப்படக் கல்லூரியில் படித்தபோது அவர் என் வகுப்பு தோழன். அவர் சிறந்த நடிகர் மற்றும் நல்ல மனிதர். நல்ல நண்பனை இழந்து விட்டேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


