திமுகவின் முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ்.விஜயன். இவர் கடந்த 1999, 2004, 2009-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் நாகை (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது திமுக மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார். அத்துடன் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ளார்.
விஜயன் வீடு தஞ்சாவூரில் உள்ள சேகரன் நகரில் உள்ளது. இவரது குடும்பத்தினர் இங்கு தங்கியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றிருந்தனர். அவர்கள் இன்று வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். விஜயன் வீட்டில் இருந்து 300 சவரன் அளவிற்கு திருடி போயிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் தடவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விஜயன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து நகைகளை திருடிச் சென்றுள்ளனர். வீட்டின் பின்புறம் உடைக்கப்பட்ட தடயங்களை போலீஸார் சேகரித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


