சீனாவுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது வரி விதிப்பினை அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். ஏற்கெனவே சீனாவுக்கு 30 சதவீத வரி விதித்த டிரம்ப், தற்போது 100 சதவீத வரியை உயர்த்தியுள்ளார். உலக நாடுகள் மீது அமெரிக்க நடத்தி வரும் வர்த்தகப் போருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ” நவம்பர் 1-ம் தேதி முதல், தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு பொருளின் மீதும் பெரிய அளவிலான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக, உலகிற்கு மிகவும் விரோதமான கடிதத்தை அனுப்புவதன் மூலம் சீனா வர்த்தகத்தில் அசாதாரணமான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது விதிவிலக்கு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. அதிக வரி விதித்தால் அமெரிக்காவில் மின்சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
இந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன் அவர்களால் வகுக்கப்பட்டு உள்ளன. இது சர்வதேச வர்த்தகத்தில் முற்றிலும் கேள்விப்படாதது, பிற நாடுகளுடன் கையாள்வதில் ஒரு தார்மீக அவமானம். சீனா இந்த முன்னோடியில்லாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல், சீனாவுக்கு மேலும் 100 சதவீத வரி விதிக்கப்படும். அனைத்து முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்போம். வர்த்தகத்தில் நியாயமற்ற நடைமுறைகளை சீனா கையாள்கிறது” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் நவம்பர் 1-ம் தேதி முதல் சீனாவுக்கு வரி 130 சதவீதமாக உயர்கிறது. நோபல் பரிசை எதிர்பார்த்துக் காத்திருந்த டொனால்ட் டிரம்ப், அது கிடைக்காத ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் சீனா மீது 100 சதவீத வரி விதித்துள்ளார்.


