லண்டனுக்குச் சென்ற விமானத்தில் இருந்து புகை வெளியேறியதால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 142 பேர் பயணம் செய்தனர். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீர் என விமானத்திற்குள் புகை வெளியேறியது. இதனால் பயணிகள் நான்கு பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம், ருமேனியா தலைநகர் புக்காரெஸ்ட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏற்கெனவே மருத்துவக்குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டதால், விமான நிலையத்தில் காத்திருந்த அந்தக்குழு, மூச்சுத்திணறலுக்கு உள்ளான நான்கு பயணிகளுக்கும் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் புகை கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.


