ரஷ்யாவில் 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் திடீரென பழுதாகி ஒரு வீட்டில் விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தாகெஸ்தான் நகரில் கே.ஏ-226 என்ற ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. கிஸ்லியாரிலிருந்நது இஸ்பர்பாஷுக்குப் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் நடுவானில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் விமானி ஹெலிகாப்டரை காப்பாற்றுவதற்காக காஸ்பியன் கடற்கரை அருகே அச்சி- சு கிராமத்திற்கு அருகே அவசரமாக தரையிறக்க முயன்றார்..
ஆனால், கராபுடக்கென்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆளில்லா வீட்டில் ஹெலிகாப்டர் மோதி விழுந்தது. இதில் ஹெலிகாப்டர் இரண்டாக நொறுங்கி விபத்திற்குள்ளானது. அது தரையில் விழுவதற்கு முன்பே ஹெலிகாப்டரின் வால் பகுதி தரையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. இது குறித்த தகவல் அறிந்த அவசரகால மீட்பு பணியாளர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முன் சுமார் 80 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தீ பரவி விட்டது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் இரண்டுபேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த 5 பேரும் ரஷ்ய ராணுவ நிறுவனமான கிஸ்லியார் எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஆலையின் ஊழியர்கள் ஆவார்கள் இந்த விபத்து குறித்து ரஷ்ய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்திற்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


