சென்னையில், பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு எதிரே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் எதிர்ப்பு :-
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பண்பாடு, ஒழுக்கம், குடும்ப அமைப்பைச் சீரழிப்பதாகவும், அதில் ஆபாசம், வன்முறை அதிகம் இருப்பதாகவும் கூறி, இந்நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

போராட்டம் அறிவிப்பு:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணி சார்பில், பிக்பாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

காவல்துறை குவிப்பு:
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் படப்பிடிப்பு தளத்திற்கு (பிக்பாஸ் ஷூட்டிங் ஸ்பார்ட்) எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க, அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர்.
போராட்டத்திற்கான காரணம் :-
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழர் பண்பாடு, மரபு மற்றும் குடும்ப அமைப்பைச் சீரழிக்கும் ‘வணிக நஞ்சாக’ மாறி உள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிகழ்ச்சி இளைஞர்களைத் தவறானப் பாதைக்கு இட்டுச் செல்வதுடன், சமூக ஒழுக்கத்திற்கும் பண்பாட்டு அச்சுறுத்தலாக விளங்குகிறது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அமைப்புகள் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



