தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே ஆம்னி பேருந்துகள் இன்று மாலை முதல் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ” தமிழ்நாட்டில் இருந்து கேரளா சென்ற ஆம்னி பேருந்துகள், அம்மாநில போக்குவரத்துத் துறையினரால் சிறைபிடிக்கப்பட்டன. அந்த பேருந்துகளுக்கு ரூ70 லட்சத்துக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல கர்நாடகாவிலும் 60-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு ரூ1.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இரட்டை வரி மற்றும் கடுமையான அபராதங்களை செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். இதனால் கடந்த 7-ம் தேதி இரவு முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கவில்லை. இதனையடுத்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று (நவம்பர் 10) மாலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் இடையே ஆம்னி பேருந்துகளை இயக்குவதை நிறுத்துகிறோம். இந்த பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு சுமூக தீர்வை உருவாக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


