மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 460 பேரை துணை ராணுவப்படை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடான் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கடந்த 500 நாட்களாக போராடி மேற்கு டார்பரில் உள்ள எல்-ஃபாஷர் நகரத்தை துணை ராணுவப்படை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், சூடானின் துணை ராணுவப்படைகள் எல்-ஃபாஷரில் உள்ள சவுதி மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் உள்பட 460 பேரை கொடூரமாக கொலை செய்தனர்.
இதனை உலக சுகாதார அமைப்பின்(டபிள்யூஹெச்ஓ) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படுகொலைகள் அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கொடூர படுகொலைகள் காரணமாக எல்-ஃபாஷர் நகரத்தை விட்டு 35,000 பேர் வெளியேறியதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அக்டோபர் 20-ம் தேதி வரை எல்-பாஷரில் 1,350 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா கூறியிருந்த நிலையில் தற்போது 460 பேர் கொல்லப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


