பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் பூசாரியின் கன்னத்தில் மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவர் ஜெயந்தி மற்றும் தேவர் குருபூஜை நிகழ்வை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்
நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக சார்பில் ஜி.கே.மணி ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மூவேந்தர் முன்னேற்ற கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வந்தார். அப்போது பூசாரிகள் தடுத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், ஒரு பூசாரியின் கன்னத்தில் அறைந்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் அமர்ந்து சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டார். அவரிடம் போலீஸார் மற்றும் சமூக அமைப்பினர் சமாதானம் செய்ததை அடுத்து அவர் தர்ணாவை கைவிட்டார். இந்த சம்பவத்தால் பசும்பொன்னில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.


