ராணுவ ஆயுத ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கிராமப்புறத்தில் ராணுவ வெடிமருந்து உற்பத்தி ஆலை இயங்கி வந்தது. இங்கு ராணுவ மற்றும் விண்வெளித் தொழில்களுக்கான வெடி மருந்துகளை உற்பத்தி செய்யும் அக்யூர்ட் எனர்ஜிடிக் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் 19பேர் காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் குலுங்கின. மேலும், சிலர் இந்த வெடிவிபத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அவசரகால மேலாண் கழகத்தின் அதிகாரிகள் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே மேயர் பிராட் ராக்போர்டு, இது நம்முயை சமூகத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவம் என தெரிவித்துள்ளார்.
இந்த வெடி விபத்து குறித்து ஹம்ப்ரிஸ் கவுண்டியைச் சேர்ந்த ஷெரிப் கிறிஸ் டேவிஸ் கூறுகையில், “எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகவும் பேரழிவு தரும் சூழ்நிலைகளில் ஒன்று. தற்போது 19 பேரை காணவில்லை. துரதிர்ஷ்டவசமாக, சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அந்த விவரங்களை வெளியிடுவதற்கு முன், அவர்கள் குடும்பத்தினருடன் பேசி முறையாக அறிவிப்போம்” என்றார்.


