கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் கூட்ட நெரிசலுக்கான காரணத்தை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து கரூர் போலீஸாரும் விசாரணை நடத்தியதில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். நீதிபதி அருணா ஜெகதீசன் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் போலீஸார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூருக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


