ராஜபாளையத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில் திருட்டை தடுக்க முயன்ற 2 பாதுகாவலர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் உள்ளது. அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்த கோயிலில் பேச்சிமுத்து(50), சங்கரபாண்டியன்(65) ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு கோயிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைத்து திருட முயன்றுள்ளார். இதனை கோயில் காவலர்கள் இருவரும் தடுக்க முயற்சித்தனர். அப்போது காவலர்கள் இருவரையும் அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட காவலர்கள் இவருரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கோயில் உண்டியல் சேதமாகியுள்ளது. எனவே, கொள்ளையர்கள் திருட முயன்ற போது காவலர்கள் பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் தடுக்க முயன்ற போது வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் திருட்டைத் தடுக்க முயன்ற பாதுகாவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


