டெல்லி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞருக்கு கர்நாடகா பாஜக மாநில தலைவர் பாஸ்கர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பு வீச்சு
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நேற்று முன்தினம் வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் செருப்பை வீச முயன்றார்.
ஆனால், அந்த செருப்பு நீதிபதி மீது படவில்லை. இதையடுத்து ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ராகேஷ் கிஷோருக்கு கண்டனமும் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் அவருக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை
அண்மையில், மத்தியப்பிரதேச மாநிலம், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோயின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் விசாரித்தார். அப்போது அவர், ” நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்” என்று கூறினார். இதன் மூலம் கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு செருப்பை வீசியதாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார். இந்த நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
பாஜக பாராட்டு
இந்நிலையில், கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ்,உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது செருப்பு வீசிய வழக்கறிஞருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில், “சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். இதன்பின் அந்த பதிவை பாஸ்கர் ராவ் நீக்கி விட்டார்.
காங்கிரஸ் கண்டனம்
இந்த நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். பாஸ்கர் ராவிற்கு கர்நாடகாவில் கண்டனம் வலுத்து வருகிறது.


