கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் ஒருவரை குற்றம் சாட்டுவது சரியில்லை என்று நடிகர் இளவரசு கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த இளவரசு தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கினார். இதன் பின் முழுநேர நடிகராக மாறி விட்டார். நகைச்சுவை, குணச்சித்திரம் என உணர்ச்சிகளை விதவிதமாக வெளிப்படுத்தக்கூடிய இளவரசு ஒரு யூடியூப் சேனலுக்கு கரூர் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அதில், “கரூர் சம்பவம் குறித்து ஒரு ஆட்டோ டிரைவர் பேசியதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர், ‘பகுத்தறிந்து, எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். சுயமாக யோசிக்க வேண்டும். யாருடைய வழிகாட்டுதலும் உங்களை சரி செய்யும் என்று நம்பாதீங்க’ என்று சொல்லியிருந்தார். அவர் பாமரன் என நான் கருதவில்லை. அவர் பக்குவமானவர் என நான் கருதுகிறேன். அது தான் என்னுடைய கருத்து.
சமூக ஊடகங்கள் ஆதிக்கம் பெற்றுள்ள இக்காலத்தில், ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால், அதைபற்றி தான் அடுத்த 20 நாட்களும் பேசுகிறார்கள். அதைச் சுற்றி மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறது. கரூரில் உயிரிழந்த 41 பேர் திரும்ப வரப்போகிறார்களா? இனிமேல் ஒரு உசுரு கூட அப்படி போகக் கூடாது என்பதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். ஒருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை. அது அநாகரீகத்தின் உச்சம்.
இந்த விஷயத்தில் அனைவர் மீதும் தவறு உள்ளது. கும்பகோணத்தில் தீப்பிடித்து 91 குழந்தைகள் பலியானார்கள். அப்போது கிரி பட ஷூட்டிங்கில் இருந்தேன். அந்த 10 நாட்களுக்கு பிறகு எல்லா பள்ளிகளும் சரியாகிவிட்டதா? தீப்பிடிக்காமல் செய்து விட்டோமா? ஒரு சம்பவத்தை வைத்து செய்தி ஊடகங்கள் பெரிய வருமானம் சம்பாதிக்கிறார்கள். அதில் வருமானம் இல்லையென்றால் அடுத்த சம்பவத்துக்கு மாறிவிடுவார்கள். கரூர் சம்பவத்தில் விஜய் இருப்பதாலே அதை சுற்றி ஒரு வியாபாரம் ஓடுகிறது. ” என்று கூறியுள்ளார்.


