
மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” எம்ஜிஆர் இயக்கத்தை தொடங்கிய நாளிலிருந்து இயக்கத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர் செங்கோட்டையன். அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, கட்சியை வளர்க்க உதவியவர்.
அதிமுக பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளது. அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். அவரது எண்ணம் நிறைவேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார்.