
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் உட்பட 7 பேருக்கு மட்டும் காவல்துறை அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்திற்கு மிக முக்கிய விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அளிப்பது தொடர்பாக உள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2012-ம் ஆண்டில் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு வருகை தரும் நிதி ஆணையம், மனித உரிமைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம், நாடாளுமன்ற குழுக்கள், மாநில சட்டசபை குழுக்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் வரும்போது என்னென்ன அளவில் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு கவனமாக பரிசீலனை செய்து சில முடிவுகளை மேற்கொண்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டிற்கு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் யார்-யாருக்கு மட்டும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் அளிக்கும் அறிவுரைகள் படியும், விதிவிலக்காக மாநில அரசு எடுக்கும் முடிவுகள் படியுமே, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அந்த நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
அந்தவகையில், இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசின் கேபினட் அமைச்சர்கள் ஆகியோருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எங்கு, எந்த அளவில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளின்படி முடிவு செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.