
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பதிலடி தந்துள்ளார்.
மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய்,, “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருன்கிறனர். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வாக கச்சத்தீவை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை மந்திரி விஜித ஹேரத் கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக தலைவர் விஜய், மாநாட்டில் பேசும் போது கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள் என்று பேசியது குறித்து ஹெரத்திடம் வினவப்பட்டது. அதற்கு அவர், கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமானது. அது ஒருபோதும் மாறப்போவதில்லை. தென்னிந்தியாவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் மேடைகளில் வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அளிப்பதற்கு ஒவ்வொரு விஷயங்களையும் கூறுவார்கள். அப்படித்தான் கச்சத்தீவு பற்றி கூறுகிறார்கள். கச்சத்தீவு குறித்து அவர்கள் பேசுவது இது முதல்முறை அல்ல.
இதேபோல பலமுறை தேர்தல் மேடைகளில் கச்சத்தீவு விவகாரத்தை பேசியுள்ளனர். தேர்தல் மேடைகளில் கூறுவதால் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. கச்சத்தீவு குறித்து நடிகர் விஜய் தேர்தல் மேடை ஒன்றில் பேசியதை பார்த்தேன். அதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை இன்றும், நாளையும், என்றும் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவுதான். எந்த ஒரு ராஜதந்திர செயல்பாடுகளுக்காகவும் கச்சத்தீவை இந்தியாவுக்கு நாங்கள் வழங்க மாட்டோம் என்று தெளிவாக கூறுகின்றேன். இந்திய அரசு மட்டத்தில் இருந்து யாராவது கருத்து தெரிவித்தால், அவர்கள் பேச்சு குறித்து கவனம் செலுத்தலாம். எனவே, அரசியல் மேடைகளில் பேசப்படும் கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டாம். கச்சத்தீவை இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.