
விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் விடுவதால் விமான போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது.
விமான நிலையத்தைச் சுற்றி 5 கி.மீ எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், விமானப் போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சிறுவர்கள் பட்டம் விடுவதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கை விமானப்படை, பட்டம் விடும் நடவடிக்கைகள் காரணமாக விமானப் போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விடும் பட்டம் பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என இலங்கை விமானப்படை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விமான நிலைய ஓடுதளங்களின் அருகில் பட்டம் விடுவது மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். உலகளாவிய ரீதியில் விமான விபத்துகளுக்குக் காரணமாகவும் இது அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படியான செயல்கள் நேரடியாக விமானப் பறப்பதை தடைசெய்வதோடு, பயணிகள் மற்றும் பணியாளர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், இலங்கையில் கட்டுநாயக்கா, இரத்மலானை, ஹிங்குராங்கொட, சீனக்குடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தளையை சூழவுள்ள பிரதேசங்களில் பட்டம் பறக்கவிடுவது குறிப்பாக ஆபத்தானதாகக் கருதப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் பட்டம் விடும் போது பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.