
தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றின் வேகமாற்றம் காரணமாக, பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ள நிலையில், துரைபாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த சில மணி நேரத்திலும் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், நகர மக்களிடம் அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தில் உள்ள பொதுமக்கள், குறிப்பாக கடலோர மாவட்ட மக்களுக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதோடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.