
குடியரசு துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜினாமா செய்தார். இந்த பதவிக்கு போட்டி இருக்கும் பட்சத்தில், செப்டம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்றக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பின் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராகமகாராஷ்டிரா ஆளுநர் சி.வி.ராதாகிருஷ்ணனின் பெயரை பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா அறிவித்தார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதார குடியரசு துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என்றும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடடம் ஆலோசித்திருப்பதாக நட்டா தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் இன்று தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கும்படி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.