நம்மால் அரசியல் வரலாறு நிகழப்போவது நிஜம்- தவெக தலைவர் விஜய் கடிதம்

மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம் என்று கட்சி தொண்டர்களுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரப்பத்தியில் ஆக.21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தவெக தொண்டர்களுக்கு கட்சி தலைவர் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதில், நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’ என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம்.

மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன். உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார்.

Related Posts

தவெக தலைவர் விஜய் சிங்கம் தான், ஆனால்,: சீமான் கிண்டல்!

இது வேட்டையாட வரும் சிங்கம் அல்ல.வேடிக்கை காட்ட வரும் சிங்கம் என தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக…

இமானுவேல் சேகரனாரின் சமூகநீதிப் பாதை வழிகாட்டுகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவு நாளில் அவரது புகழ்ச்சுடர் அணையாமல் இன்றளவும் சமூக நீதிப் பாதைக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *