
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென நொறுங்கி விழுந்து 2 விமானிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட கிராமத்திற்கு நிவாரணப்பொருட்களை ஏ ற்றிக் கொண்டு மாகாண அரசாங்கத்தின் MI-17 ஹெலிகொப்டர் நேற்று மாலை சென்றது. மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டரில் இருந்து விழுந்த மூன்று பேரை மீட்டனர். ஆனால், 2 விமானிகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் அலி அமிர் காந்தபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த ஐந்து பணியாளர்கள் உயிரிழந்தனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற மாகாண அரசாங்கத்தின் MI-17 ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக மொஹ்மண்ட் மாவட்டத்தின் பாண்டியாலி பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மறைவிற்கு அரசு ஒரு நாள் துக்கம் கடைபிடிக்கும். மேலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அவர் கூறினார். மேலும் விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன, மேலும் உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.