
150 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று இரவு சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சி. வேணுகோபால் உட்பட 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட 150 பேர் பயணம் செய்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 150 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் டெல்லிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த பரபரப்பு விமான பயணம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிடுள்ளார். அதில், இந்த விமானப் பயணம் விபத்திற்கு மிக அருகில் சென்றது. சற்று தாமதமாகப் புறப்பட்ட பயணம், பயங்கரமான பயணமாக மாறியது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எதிர்பாராத விதமான கடுமையான காற்றழுத்த சரிவில் சிக்கினோம். சுமார் 1 மணி நேரம் கழித்து, விமானி சிக்னலில் கோளாறு இருப்பதாக விமானம் சென்னைக்குத் திருப்பி விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்க முயற்சிக்கும் முன்பு சுமார் 2 மணி நேரம் விமான நிலையத்தைச் சுற்றி வந்தது. ஆனால், முதல் முயற்சி ரத்து செய்யப்பட்டது. ஏனெனில், அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சில நொடிகளில், விமானி விரைந்து முடிவெடுத்து விமானத்தை மேலே இழுத்தது, அதில் இருந்த அனைவரின் உயிரையும் காப்பாற்றினார். இரண்டாவது முயற்சியில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஏர் இந்தியாவின் சில விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.