
8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆர்டிசி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து பிஆர்டிசி மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனையேற்று ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால், பிஆர்டிசி நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்கவில்லை. இதனால் பிஆர்டிசி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என பிஆர்டிசி போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
கடந்த 28-ம் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் ‘எஸ்மா’ (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.