
போடி அருகே தடையை மீறி முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 56 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். இப்போராட்டத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை. அத்துடன் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்திருந்தனர்.
தடையை மீறி தடுப்புகளை அகற்றி சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஆனால் தடையை மீறி அவர்கள் மாடுகளுடன் மலைப்பகுதீக்குச் சென்றனர். இந்த போராட்டத்தில் சீமான் கையில் கம்புடன் பங்கேற்றார். இந்த நிலையில், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் உள்பட 56 பேர் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.