
மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல குற்றவாளி ரிசார்ட்டில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த போது போலீஸாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அதர்தல் பகுதியைச் சேர்ந்தவர் அபய் கனௌஜியா. ஜபல்பூரின் பிரபல குற்றவாளியான இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கலவரம் செய்தல் உள்பட 11 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், பனகரில் உள்ள சுர்மாவா காட்டுப்பகுதியில் உள்ள ரிசார்ட்டில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பனகர் காவல் நிலைய போலீஸார் அந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்தனர்.
ஆனால், துப்பாக்கியைக் காட்டி போலீஸாரை அபய் மிரட்டினார். பிடித்தால் சுட்டுக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். ஆனால், போலீஸார் அவரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அப்போது அவரிடம் துப்பாக்கி மட்டுமின்றி தோட்டாக்களும் இருந்தன. எதற்காக துப்பாக்கியுடன் அவர் பதுங்கியிருந்தார், யாரைக் குறிவைத்து அவர் பனகர் வந்தார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஜபல்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.