
இறந்து போன தனது சகோதரனின் ஆன்மாவை அமைதிப்படுத்த ரயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசிய வாலிபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக டெல்லி- மொராதாபாத் ரயில் பாதையில் ஓடும் எக்ஸ் ரயில்களில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நடந்ததாக மத்திய ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இரண்டு ரயில்களில் நடந்த இந்த தாக்குதலில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை நோக்கி இரவு நேரத்தில் ஒரு இளைஞர் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடினார். இதனால் அப்பகுதியே பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரயில்வே போலீஸார், அந்த இளைஞரை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில், அவர் சிவில் லைன்ஸ் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த தீபு சைனி என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து ஒரு பெட்ரோல் குண்டு பாட்டிலும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்து போன தனது சகோதரனின் ஆன்மாவை அமைதிப்படுத்தவே ரயில்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினேன் என்று அவர் கூறினார். இதனால் ரயில்வே போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, ரயில் பயணிகளுடன் தனக்கு தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும், வேகமாக ஓடும் ரயில்களைத் தாக்குவது ஆன்மாவை விரைவாக விடுக்கிறது என்று கூறினார். ஏற்கெனவே இரண்டு ரயில்கள் மீது அவர் தான் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
மன அழுத்தம் காரணமாக தீபு சைனி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ஆனாலும் அவர் தனியாக இந்த சதி வேலையைச் செய்தாரா அல்லது அவருக்குப் பின்னால் யாராவது இருக்கிறார்களா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது பொருள் காணப்பட்டால், உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவிக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.