
டெல்லியில் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் மர்மநபர் 4.5 பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பங்கேற்றுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்ற குடியிருப்பு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருநதார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர், சுதா கழுத்தில் கடந்த தங்கச்செயினை பறிக்க முயன்றார். ஆனால், அவருடன் சுதா போராடினார். ஆனாலும், சுதா கழுத்தில் கிடந்த 4.5 சவரன் தங்கச்செயினை மர்மநபர் பறித்துச் சென்றார். இந்த சம்பவத்தில் சுதா கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சாணக்யபுரி காவல் நிலையத்தில் சுதா எம்.பி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து உள்துறை அமைச்சருக்கு சுதா எம்.பி கடிதம் எழுதியுள்ளார். டெல்லி நாடாளுமன்றம் அருகே தமிழகத்தைச் சேர்ந்த பெண் எம்.பியிடம் நகைபறிப்பு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.