இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலை இன்று (டிசம்பர் 19) வெளியிடுகிறது. இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) அண்மையில் நிறைவடைந்தன. இதனையடுத்து இன்று வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிடுகிறார். இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான முகவரியில் இருந்தவர்களை தவிர, உயிரிழந்தவர்கள் முகவரி மாற்றியவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கும். இப்படி நீக்கப்பட்டதற்கான காரணமும் அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும். இருப்பினும் இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18-ம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம்என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


