திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரை அவுட்போஸ்ட்டில் உள்ள பெரியார் சிலை அருகே இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம். திருப்பரங்குன்றம் மலையின் தர்ஹா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் தீர்ப்பை நிறைவேற்றும் பட்சத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டும் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தர்ஹா அருகே அமைந்திருப்பது தீபத்தூண் கிடையாது எல்லைக்கல் என தமிழக அரசும், அந்த தூண் தர்ஹாவுக்குச் சொந்தமானது என தர்ஹா நிர்வாகமும் வாதிட்டு வருகிறது.
இந்நிலையில், மதுரை தல்லாகுளம் பெரியார் சிலை அருகே உள்ள போலீஸ் அவுஸ்போஸ்ட்டிற்குள் சென்று இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர், மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பது தெரிய வந்தது. எம்பிஏ பட்டதாரியான இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.
மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்த பூர்ணசந்திரன் பகுதிநேரமாக பழ வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். தன் சரக்கு வாகனத்துடன் தல்லாகுளம் வந்த பூர்ணசந்திரன், ஆளில்லாத போலீஸ் அவுட் போஸ்ட்டிற்குள் சென்று உள்ளே பூட்டிக் கொண்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
தற்கொலை செய்வதற்கு முன்பு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி வாட்ஸ்அப்பில் ஆடியோ பதிவு செய்து அதை நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு பூர்ணசந்திரன் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


