திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி மதுரையில் இளைஞர் தீக்குளித்து இறந்ததற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பூர்ணச்சந்திரன். இவர் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என வாட்ஸ்-அப்பில் ஆடியோ பதிவு செய்து விட்டு தல்லாகுளம் பெரியார் சிலை அருகே உள்ள ஆளில்லாத போலீஸ் அவுட் போஸ்ட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது. பூர்ணச்சந்திரன் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலச் செயலாளர் கதலி நரசிங்க பெருமாள், மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் அவமதிப்பு செய்தது. இதனால் மன உளைச்சல், வேதனை அடைந்து என் மறைவுக்கு பிறகாவது திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன் உடலை தீபமாக, தீப்பந்தமாக எரித்து உயிரிழந்துள்ளார் பூர்ணச்சந்திரன்.
அவரது இறப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பூர்ணச்சந்திரன் மனைவிக்கு அரசு வேலை, குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாது. பூர்ணச்சந்திரன் குடும்பத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்யவுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மாலை பூர்ணசந்திரன் படத்துக்கு மரியாதை செலுத்தி கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் மதம் சார்ந்த பிரச்னை அல்ல. கார்த்திகை தீபம் ஏற்றுவது தமிழர்களின் பண்பாட்டு உரிமை. இதில் உரிய கவனம் செலுத்தி தீபம் ஏற்ற வேண்டும். 2026-ல் பூர்ணச்சந்திரனின் கனவான தீபம் ஏற்றுவது நடந்தே தீரும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.


