கந்து வட்டிக்காரர்கள் மிரட்டலால் தனது சிறுநீரகத்தை 8 லட்ச ரூபாய்க்கு விவசாயி விற்ற கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ,சந்திராபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன். தனது தொழில் நஷ்டமடைந்ததால் பால் வியாபாரம் செய்ய ரோஷன் முடிவு செய்தார். இதற்காக உள்ளூரை சேர்ந்த வட்டிக்காரரிடம் 1 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கு மாதம் 40சதவீத வட்டி விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வட்டிக் கட்டத் தவறினால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
அவர் பால் வியாபாரம் துவங்கும் முன்பே மாடுகள் இறந்ததால் அதிர்ச்சியடைந்த ரோஷன், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர் வாங்கிய 1 லட்ச ரூபாய் வ்ட்டி, அபராதம் என மாறி 74 லட்ச ரூபாயாக மாறியுள்ளது. இதனால் தன்னிடமிருந்த டிராக்டர், நிலம் உள்ளிட்ட அனைத்தையும் விற்றும் அவரால் கடனை அடைக்க முடியவில்லை.
அன்றாடம் கடன்காரர்கள் வந்து நெருக்கடி தந்ததுடன் ரோஷனை மிரட்ட ஆரம்பித்தனர். தன்னிடம் விற்பதற்கு பொருட்கள் எதுவுமில்லை என்பதால், தனது சிறுநீரகத்தை விற்பதற்கு ரோஷன் முடிவு செய்தார். இதற்காக ஒரு ஏஜென்டை அணுகிய போது அவர் கடந்த ஆண்டு (2024) ரோஷனை கம்போடியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு ஒரு மருத்துவமனையில் 8 லட்ச ரூபாய்க்கு தனது சிறுநீரகத்தை ரோஷன் விற்றுள்ளார். ஆனாலும், அவரால் கடனை அடைக்க முடியவில்லை. அங்கிருந்த ஏஜென்டுகள், கடனை அடைக்கும் வரை இங்கேயே வேலை செய்து என்று மிரட்டி அவரை சிறை வைத்தனர்.
இந்த நிலையில், கம்போடியாவில் சிக்கித் தவித்த ரோஷன், தனது சொந்த ஊரான பிரம்மாபுரி தொகுதி எம்எல்ஏவிற்கு வாட்ஸ்அப் மூலம் ரகசியமாக தகவல் அனுப்பினார். இதையடுத்து எம்எல்ஏ மாவட்ட நிர்வாகத்தை நாட தற்போது, ரோஷன் கம்போடியாவில் இருந்து இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது 1 லட்ச ரூபாய்க்கு வாங்கிய கடன் 74 லட்ச ரூபாயாக மாறிய விஷயத்தை கூறியுள்ளார். இதையடுத்து கந்து வட்டிக்காரர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் உடல் உறுப்பு திருட்டில் ஈடுபடும் ஏஜென்டுகளைப் பிடித்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


