சென்னை திருவொற்றியூரில் பிரபல ரவுடியை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்யா ( 24). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எண்ணூர் காவல் நிலையத்தில் பி பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாக சத்யா உள்ளார். இவர் நேற்று நள்ளிரவு திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 8 பேர் கொண்ட மர்மக்கும்பல், சத்யாவை டூவீலர்களில் விரட்டியுள்ளது. இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க திருச்சிணாங்குப்பம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சத்யா சென்றார். ஆனால், விடாமல் துரத்திய அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சத்யாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டுத் தப்பியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சத்யா உயிரிழந்தார். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சத்ய உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூர் பகுதியில் விஜய் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சத்யா முக்கிய குற்றவாளி என்று கூறப்படுகிறது. அதற்குப் பழிக்குப் பழியாக சத்யா படுகொலை செய்யப்பட்டாரா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளைக் கைப்பற்றி கொலையாளிகளை தேடி வருகின்றனர். பிரபல ரவுடி ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


