வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி வாக்காளர்கள் வரை நீக்கப்படலாம் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவையில் டெல்லிக்குக் கிளம்பிய அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,” எஸ்ஐஆர் பணிகள் டிச.9-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி எங்கள் கட்சியின் தேசிய தலைவர் 12 மாநிலங்களுக்கான கூட்டத்தை கூட்டியுள்ளார். அதில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். காசி தமிழ் சங்கத்திலும் கலந்து கொள்கிறேன்” என்றார்.
தவெக தலைவர் விஜய் முதல்வராவார் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்கு, ” செங்கோட்டையன் அரசியல் பாரம்பரியம் கொண்டவர்; நிறைய கள அரசியலைப் பார்த்தவர்; நிறைய முறை வெற்றி பெற்றவர் ; யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் . இன்னொரு இடத்திற்கு போய்விட்டார் என்பதற்காக தவறாகவும் பேச வேண்டாம் . செங்கோட்டையன் அவர்களுடைய கட்சியை பற்றி பெருமையாக பேசுவார், அதை அவர்கள் கருத்தாக பார்க்க வேண்டும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று அண்ணாமலை பதிலளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “எஸ்ஐஆர் பணிகள் மூலம் 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாக்காளர் பட்டியலில் நீக்கம் இருக்கும். இறந்து போனவர்கள், குடிபெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என இருக்கும் போது இந்த அளவு நீக்கம் வர வேண்டும். இதுகுறித்து டிச.11-ம் தேதிக்குள் தகவல் வரும், டிச.20-ம் தேதிக்குள் ஒரு முழுமையான வடிவம் கிடைக்கும். இது தொடர்பான கூட்டம் தான் டெல்லியில் நடக்கிறது. சென்னையில் உள்ள தொகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை நீக்கப்பட வேண்டிய ஓட்டுகள் இருக்கிறது. இது தமிழக தேர்தல் களத்தை நிச்சயமாக மாற்றும். ஒரு கோடி வாக்குகள் நீக்கம் என்பது நிச்சயம் 12 முதல் 13 சதவீதம் வரை இருக்கின்றது. தமிழகத்தில் நீக்கம் 10 சதவீதத்தை தாண்டும் போது இந்த பட்டியலை வைத்து தான் கடந்த தேர்தல்களை சந்தித்தோம் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.
திமுகவினர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மென்ட் மோசனுக்கு கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்திய இறையாண்மைக்கு எதிராக தண்டனை கொடுக்கவில்லை. லஞ்ச லாவண்யத்தில் இல்லை. அவரது ஒரு தீர்ப்பு திமுகவிற்கு பிடிக்கவில்லை என்பதற்காக இம்பீட்ச்மென்ட் மோஷன் கொண்டு வருவோம் என்று கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதால் அவரை நாங்கள் நீக்குவோம் என்றால் ,மற்ற நீதிபதிகளை அச்சுறுத்துவது போலதான் திமுக நடந்து கொள்கிறது” என்றார்.


