September 10, 2026

அதிமுகவில் பரபரப்பு… எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்த மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் நேரடியாக தேர்வு செய்வதற்குப் பதிலாக பொதுக்குழுவால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் வழக்கறிஞர் சூரியமூர்த்தி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், இந்த வழக்கைத் தாக்கல் செய்த திண்டுக்கல் சூரியமூர்த்தி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை; வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவர்; எனவே, சூரியமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அதிமுக கட்சி விதிகளின் படி உறுப்பினர் அட்டையை வழங்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமே இல்லை; அதிமுக விதிப்படி கட்சியின் பொதுச்செயலாளர் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தாம் அதிமுக உறுப்பினர்தான் என சூரியமூர்த்தி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று சூரியமூர்த்திக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தள்ளுபடி செய்தது.

சென்னை உரிமையியல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சூர்ய மூர்த்தி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை ரத்து செய்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சூர்யமூர்த்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may have missed