தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றியதாக அன்புமணி மீது டெல்லி காவல் நிலையத்தில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி புகார் செய்துள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், டாக்டர் அன்புமணிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக பாமக இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பாமக தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி கொள்ளவும் ராமதாஸ் தரப்பிற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் நேற்றைய முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக உள்கட்சி விவகாரத்தால் மாம்பழம் சின்னத்தை முடக்க போவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் இந்த வழக்கை கிரிமினல் நீதிமன்றத்தை நாட டெல்லி நீதிமன்றம் ராமதாஸ் தரப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் டெல்லி முகாமிட்டுள்ள ராமதாஸ் ஆதரவாளரான பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, நாடாளுன்ற ஸ்ட்ரீட் காவல்நிலையத்தில் அன்புமணி மீது இன்று(டிசம்பர் 6) புகார் அளித்துள்ளார். அதில், அன்புமணி தேர்தல் ஆணையத்தில் பொய்யான ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி உள்ளார் என்றும், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் பாமகவில் மேலும் சலசலப்பை அதிகரித்து உள்ளது.


