பிறந்த நாளை நேற்று கொண்டாடிய திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிசம்பர் 4) காலமானார். அவருக்கு வயது 86.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் 1945-ம் ஆண்டு ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மகன் எம்.சரவணன். இவர் நிர்வாகப் பொறுப்பேற்ற பின் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் பிரம்மாண்டமான செலவில் படங்களைத் தயாரித்தார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் போன்ற பொறுப்புகளை வகித்தவர் ஏ.வி.எம். சரவணன். தமிழக அரசின் கலைமாமணி உள்பட பல்வேறு விருதகளைப் பெற்றவர்.
ஏவிஎம் சரவணன் தனது 85-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்த நிலையில், சென்னை வடபழநியில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக இன்று காலை அவர் காலமானார். தற்போது அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


