திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து திருப்பரங்குன்றத்தில் இந்துத்துவா அமைப்பின் ஏராளமானோர் நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றத்தில் கூடினர்.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படக் கூடும் என எதிர்பார்த்த நிலையில் கார்த்திகை தீபமானது வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மலையில் மட்டுமே நேற்று மாலை ஏற்றப்பட்டது; மேலும் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்துத்துவா அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்தனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டதால் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். திருப்பரங்குன்றத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இதையடுத்து இந்துத்துவா அமைப்பினர், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக்கூடிய பாதையிலேயே சூடம் ஏற்றி தரையில் விழுந்து வழிபட்டு விட்டு கலைந்து சென்றனர்
இதற்கிடையே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இல்லத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையீடு செய்தார். மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரணைக்கு பட்டியல் இடப்படும் என தெரிவித்தார்.


