சென்னையில் விம்கோ நகர் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சுரங்கத்திற்குள் சிக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ப்ளூ லைனில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை செல்கிறது. கிரீன் லைனில் பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை செல்கிறது.
மெட்ரோ ரயிலில் கடந்த சில மாதங்களாகவே பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு பல்வேறு டிக்கெட் கட்டண சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. தற்போது சென்னையில் மழை பெய்து வருவதால், மெட்ரோவில் பெரும்பாலானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி மெட்ரோ ரயில் இன்று (டிச.2) சென்றது. சென்ட்ரல் – உயர்நீதிமன்றம் இடையே சுரங்கப்பாதையில் ரயில் பயணித்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், பாதி வழியிலேயே ரயில் பழுதாகி நின்றது. மேலும் ரயிலுக்குள்ளே மின்சாரமும் தடைபட்டது. இதனால், சுரங்கத்திற்குள் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 20 நிமிடங்களாக ரயிலுக்குள் பயணிகள் சிக்கித் தவித்தனர். இதனால் பயணிகள் பதறித் துடித்தனர். பின்னர் பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றப்பட்டனர். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உயர்நீதிமன்ற நிலையத்திற்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையே மெட்ரோ ரயில் நின்றது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், ரயிலில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டு, வழக்கமான சேவைகளை தொடங்கியது” என தெரிவித்துள்ளது.


