தமிழ்நாட்டுக்கும், உத்தரப் பிரதேசத்தின் காசி நகருக்கும் இடையிலான ஆழமான நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடும் காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தின் கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’ என்பதாகும். இதன் மூலம் வெளி மாநில மாணவ, மாணவியர் தமிழ் கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். முதல் கட்டமாக இன்று முதல் டிசம்பர் 15 வரை தமிழ்நாட்டிலிருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்ள இருக்கின்றன.
இம்முறை, தமிழ்நாட்டிலிருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடக வல்லுநர்கள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்கள், பெண்கள், ஆன்மீக அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என ஏழு பிரிவுகளின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
மேலும் ‘தமிழ் கற்கலாம்’ முயற்சியின் கீழ் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அறிமுகம் செய்யவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழ்நாட்டிலிருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு வரவுள்ளனர், இரண்டாவது கட்டமாக, தமிழ்நாட்டில் டிசம்பர் 15 முதல் 31 வரை நடைபெறும் நிகழ்ச்சியின்போது வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழ்நாட்டிற்குப் வருகை தந்து தமிழ் பண்பாடு, கலாச்சாரம், நாகரீக தொடர்பு போன்றவற்றை தெரிந்து கொள்வதுடன் தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வை மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.


