தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியி ரோடு ஷோ நடத்துவதற்கு அக்கட்சியின் நிர்வாகிகள் அனுமதி கோரி காவல்துறையினரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் சந்திப்பை விஜய் ஒத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் நவம்பர் 23-ம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ளரங்கில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்நிலையில் சேலத்தில் மீண்டும் சுற்றுப்பயணத்தை டிசம்பர் 4-ம் தேதி தொடங்க அம்மாவட்ட காவல்துறையிடம் தவெக நிர்வாகிகள் அனுமதி கடிதம் அளித்தனர். ஆனால், காவல்துறை இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தின் போது ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக மாநில நிர்வாகிகள் புதியவன், நிரேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காவல்துறை தலைமை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த கடிதத்தில், காலப்பட்டு, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம் வழியாக சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார் என்று கூறப்படுள்ளது. ஆனால், இந்த கடிதத்திற்கு காவல்துறையினர் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


