‘ஜன நாயகன்’ படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சம்பள பாக்கி உள்ளதா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
‘தீரன் அதிகாரம் 1’ படத்தை இயக்கிய ஹெச்.வினோத் நடிகர் விஜய்யை வைத்து ‘ஜன நாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு ‘ஜன நாயகன்’படம் தான் கடைசி படம் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி ‘ஜன நாயகன்’ படம் வெளியாக உள்ளது. நடிகராக இருந்த விஜய், அரசியல்வாதியாக மாறியுள்ளதால், ‘ஜன நாயகன்’படத்தின் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
விஜய் நடித்த இந்த படம், தெலுங்கில் பாலைய்யா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அதிரடி ஆக்சன் நிறைந்த பக்கா மசாலா படமாக ‘ஜன நாயகன்’உருவாகியுள்ளது. இந்த படத்தில் அரசிய பஞ்ச் வசனங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், 115 கோடி ரூபாய்க்கு பேசி சில கோடிகளை அட்வான்ஸாக வழங்கியுள்ளார். ஆனால், மீதி பணம் கொடுக்காததால் வேறு வினியோகஸ்தரிடம் கொடுக்கலாமா என தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருவதாக தெரிகிறது.
ஏனெனில், இப்படத்தில் நடிக்க விஜய்க்கு 235 கோடி சம்பளம் பேசி அதில் 150 கோடியை கொடுத்து விட்டதாகவும், இன்னும் 85 கோடி சம்பள பாக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் இன்னமும் படத்திற்கு டப்பிங் பேசாமல் இருப்பதாக தகவல் பரவியது. தமிழக வெளியீட்டு உரிமையை விற்ற பணத்தில்தான் விஜய்யின் சம்பளம் பாக்கியை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது என்று கூறப்பட்டது.
ஆனால், இந்த ஊகங்களுக்கு ‘ஜன நாயகன்’படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சம்பள நிலுவை காரணமாக விஜய் டப்பிங் பேசவில்லை என்ற தகவல்கள் ஆதாரமற்றவை. விஜய் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்து விட்டதாகவும், அவருக்கு வழங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த மாதம் 27-ம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் ‘ஜன நாயகன்’ படக்குழு தயாராகி வருகிறது.






